(பல்லீறு நோய், பல்லீறு வீக்கம், பல் எயிறு நோய், பல்லெயிறு வீக்கம், முரசு வீக்கம், முரசு நோய், பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு, பல்சுற்றி நோய்கள் எனப் பல்வேறுபட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றது)
சிரிக்கும் போது பளீச்சென்று அழகூட்டும் அழகுப் பொருளாக, பேசும் மொழியினை சிறப்புடன் உச்சரிக்க உதவும் சாதனமாக மற்றும் முக்கியமானதாக உண்ணும் உணவுப் பொருளினை நன்றாக அரைத்துப் பின்னர் அது சமிபாடு அடைவதற்கு உதவும் இன்றியமையாத உறுப்பாக பற்கள் உதவுகின்றன.
முரசு நோய்கள்பற்களிற்குப் பாதுகாப்புத் தரும் இழையங்கள் மற்றும் என்புகள் முதலியவற்றில் ஏற்படும் கிருமித்தாக்க மற்றும் அழற்சி நோயாகும். இது பல் ஈறுகளையும் அதனைச் சுற்றியுள்ள இழையங்களையும் பாதிக்கின்றது.நோயின் தீவிரத்தைப் பொறுத்து இரண்டு படிகளாக முரசு நோய்கள் காணப்படுகின்றது
1) பல்லெயிற்று அழற்சி அல்லது பல் ஈறழற்சி (Gingivitis)
2) பற்சுற்றி அழற்சி (Periodontitis)
பல் ஈறழற்சியானது குணப்படுத்தப் படாமல் மேலும் தீவிரம் அடைந்தால் பற்சுற்றி அழற்சி ஏற்படும். மேற்குறிப்பிடப் பட்டுள்ள படத்தில் பார்த்தீர்களானால் பல்லைச் சூழவுள்ளது ஈறு என்பதை அறிவீர்கள், அந்த ஈறைச் சூழவுள்ள என்புகள் இணைப்பிழைகள் ஆகியவற்றை பற்சுற்றி (periodontium) என்கின்றோம். சுருக்கமாக முரசு அல்லது ஈற்றில் ஏற்படுவது பல் ஈறழற்சி அதே நேரத்தில் அது கடுமையடைந்து அவற்றைச் சுற்றி ஏற்படுவது பற்சுற்றி அழற்சி.