ஆரோக்கியத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டுவிட்டது. புராதன எகிப்தியர்கள் மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து A குறைபாடாக அறியப்பட்டுள்ளது.(3)
ஊட்டச்சத்து பற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது. அன்றைய காலத்தில் கடல் பிரயாணம் செய்யும் மாலுமிகளுக்கு உகந்த ஊட்டச்சத்து கிடைக்காத காரணத்தால் காயங்கள் குணப்படாமை, பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் போன்ற காரணங்களினால் இறப்புகள் நேரிட்டது.
சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து இசுகேவி (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்றுஇசுக்காட்லாந்து தேசத்து அறுவை மருத்துவர் ஜேம்ஸ் லிண்ட் கண்டறிந்தார். மே மாதம் 1747 ஆம் ஆண்டில் கடலில் இருக்கும் போது, லிண்ட் சில உடனுதவிஉறுப்பினர்களுக்கு வழக்கமான உணவுடன் சேர்த்து ஒரு நாளுக்கு இரண்டுஆரஞ்சுப் பழங்களும் ஓர் எலுமிச்சம் பழமும் வழங்கினார். மற்றவர்களுக்குவழக்கமான உணவுடன் கூடுதலாக ஆப்பிள் பானம், வினிகர், கந்தக அமிலம் அல்லது கடல்நீர் ஆகியவற்றை வழங்கினார். இந்த பரிசோதனையின் முடிவுகள் சிட்ரஸ் பழங்கள் நோயைத் தடுத்ததைக் காண்பித்தன.(4) 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு(Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்தவேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த சில தசாப்தங்களுக்கு இவரது கோரிக்கை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய வேந்திய கடற்படை மாலுமிகள் இந்த நோயினால் இறந்தனர். பின்னர் பிரித்தானிய வேந்திய கடற்படை அவரது கூற்றை ஓரளவு ஏற்றுக்கொண்டது. 19 ஆம் நூற்றாண்டில் கூட,இசுகேவியானது நற்சுகாதாரம் பேணுவதன் மூலமும் நாளாந்த உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மேலும் கடற் பிரயாணத்தின் போது மனத்தை உறுதியுடன் பேணுவதன் மூலமும் தடுக்கப்படலாம் என்னும் நிலைப்பாடு இருந்தது, எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்தன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரொபர்ட் ஃபல்கொன் இசுகொட் இருதடவைகள் அன்டார்டிக்காவை நோக்கிப் படையெடுத்தபோது இந்த நிலை மாறியது; பழுதான அடைக்கப்பட்ட உணவுவகைகளாலேயே இந்நோய் உருவாக்குகிறது என்ற புதிய கோட்பாடு உருவாகியது.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதிகளே உயிர்ச்சத்துக்களின் ஆரம்பநிலைக் கண்டுபிடிப்புக் காலங்களாகும், இக்காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவு உயிர்ச்சத்துக்கள் வேறுபடுத்தப்பட்டு அடையாளம் காணப்பட்டன. தொடக்க காலத்தில் மீன் எண்ணெய்களில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்புகள் எலிகளில் ரிக்கட்சு (Rickets) நோயைக் குணப்படுத்தின, கொழுப்பில் கரையும் இந்தப் பதார்த்தத்தை “எதிர் ரிக்கட்சு A” (antirachitic A) என அழைத்தனர், ரிக்கட்சு நோயைக் குணப்படுத்தும் முதன் முதலில் அறியப்பட்ட இந்த ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து ‘ஏ’ என அழைக்கப்பட்டாலும், பின்னர் உயிர்ச்சத்து ‘டி’யின் தொழிற்பாடே இதுவென அறியப்பட்டது.
1881ம் ஆண்டு இரசிய நாட்டைச் சேர்ந்த நிக்கோலை லுனின் என்னும் அறுவை மருத்துவர் புரதம், மாப்பொருள், கொழுப்பு மற்றும் கனிமங்கள் போன்றவை தனித்தனியாக மட்டும் அடங்கிய செயற்கைக் கலவைப் பாலை உருவாக்கி சுண்டெலிகளுக்கு வழங்கிய அதேநேரத்தில் அனைத்தும் ஒருமிக்கச் சேர்ந்த பாலையும் ஒரு சுண்டெலிக்கு வழங்கினார், விளைவில் புரதம் தனியாக மாப்பொருள் தனியாக என வழங்கப்பட்ட எலிகள் இறக்க, பாலை உட்கொண்ட எலி மட்டும் இறக்கவில்லை; இதிலிருந்து, அறியப்பட்ட இந்தப் பதார்த்தங்களைவிட ஏதோ ஒரு அறியப்படாத பொருள் சிறிய அளவிலே பால் போன்ற இயற்கை உணவுகளில் காணப்படுகிறது என்று முடிவுக்கு வந்தார்.(5) ஏனைய ஆய்வாளர்கள் இதே போன்ற ஆய்வை மேற்கொண்டபோது விளைவுகள் லுனினுடன் ஒன்றுசேராமல் இருக்கவே இவரது முடிவும் புறக்கணிக்கப்பட்டது.
கிழக்காசியாவில் நடுத்தர வர்க்கத்தினரது உணவாக உமி நீக்கப்பட்ட வெள்ளை அரிசி விளங்கிய நிலையில் அங்கு பெரிபெரி என்னும் உயிர்ச்சத்து பி1 குறைபாடு பரவலாக நிலவியது. 1884இல் யப்பானிய உயர் கடற்படையின் மருத்துவர் தகாகி கனேகிரோ பெரிபெரி நோயானது அரிசியை மட்டுமே முதன்மை உணவாக உண்ணும் வர்க்கத்தினரையே பாதிப்பதையும் மேற்கத்திய தர உணவை உட்கொள்ளும்வசதி கூடியவர்களில் இல்லாததையும் அவதானித்தார். யப்பானிய கடற்படையின் உதவியுடன் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் ஒரு சாரார் வெள்ளை அரிசி மட்டுமே உணவாக உட்கொள்ள, மறுசாரார் இறைச்சி, மீன், பார்லி, அரிசி, அவரை வகை என உட்கொண்டனர். வெள்ளை அரிசி மட்டுமே உட்கொண்ட பகுதியினரில் 161 நபர்களுக்கு பெரிபெரி நோயும் கொண்டும் 25 நபர்களுக்கு இறப்பும் காணப்பட்டது; ஆனால், மற்றப் பகுதியினரில் 14 நபர்களுக்கு மட்டுமே பெரிபெரி நோய் இருக்க, அங்கு இறப்பேதும் நிகழவில்லை.(5)(6) இதன் மூலம் தகாகியும் யப்பானிய கடற்படையும் உணவே பெரிபெரிக்குக் காரணம் என்று கருதினார்கள், ஆனால் புரதப் பற்றாக்குறைதான் காரணம் என்று தவறாக நம்பினார்கள். பெரிபெரியைப் பற்றிய மேலதிக ஆய்வு கிறித்தியான் இக்மான் என்பவரால் 1897இல் மேற்கொள்ளப்பட்டது, இதன் போது உமி நீக்கம் செய்யப்படாத அரிசிகள வழங்குவதன் மூலம் கோழிகளுக்கு பெரிபெரி வராமல் தடுத்தார். அடுத்த வருடத்தில், பிரடெரிக் கோப்கின்சு உணவில் காணப்படும் மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்றவற்றை விட வேறு ஏதோ துணைக் காரணிகள் (accessory factors) சில உணவு வகைகள் கொண்டுள்ளன என்று முன்மொழிந்தார்.(3) 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது.(7)
1910இல் உமெதரோ சுசூக்கி என்னும் யப்பானிய அறிவியலாளரால்நீரில் கரையக்கூடிய பதார்த்தம் ஒன்று அரிசியின் தவிட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது, இதற்கு அவர் அபெரிக் அமிலம் என்று பெயர் சூட்டினார். யப்பானிய அறிவியற் பத்திரிகையில் இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டார்.(8) யப்பானிய மொழியில் வெளியாகிய இந்த ஆய்வுக்கட்டுரை யேர்மனிய மொழியில் மொழிபெயர்க்கப்படும் போது நிகழ்ந்த தவறால், ஆய்வானது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஊட்டச்சத்தைப் பற்றியது என்பதனைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தை பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார்.(9) வைட்டமைன் என்னும் சொல் விரைவிலேயே கொப்கின்னுடைய துணைக் காரணிகளுடன் ஒத்துப்போனது. விரைவிலேயே வைட்டமைன் (Vitamine) என்பது பொருந்தாத ஒரு சொல், ஏனென்றால் அனைத்து உயிர்ச்சத்தும் அமைன்கள் அல்ல என்பது அறியப்பட்டது, எனினும் வைட்டமைன் எனப்படும் சொல் எங்கும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. 1920இல் “vitamine”என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க ஜாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது.(5)
அடுத்தடுத்த கால கட்டங்களில் உயிர்ச்சத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக கண்டுபிடிக்கப்பட்டு வந்தன. இவற்றை அறிமுகப்படுத்தியோருக்கு நோபல்பரிசுகளும் வழங்கப்பட்டன. 1931இல் ஆல்பர்ட் சென்ட்-கியோர்கி, ஜோசெப் எல்.சிவிர்பெலி மற்றும் சார்ள்ஸ் கிளென் கிங் போன்றோர் இணைந்து செயற்பட்டதன் பலனாக எக்சுரோனிக் அமிலம் இசுகேவி-எதிர் காரணியாகலாம் என அறியப்பட்டது, இதன் படி இந்த இசுகேவி-எதிர் காரணி அசுகோர்பிக் அமிலம் (anti-scorbutic factor: a – scorb ic) என இதனது உயிர்ச்சத்துச் செயற்பாட்டை வைத்து அழைக்கப்படத்தொடங்கியது. 1937இல் சென்ட்-கியோர்கி நோபல்பரிசு பெற்றார். 1943இல் வைட்டமின் ‘கே’ கண்டுபிடிக்கப்பட்டு அதற்காகவும் நோபல்பரிசு வழங்கப்பட்டது.(7)