இஞ்சியின் நறுமணத்திற்கு அதில் காணப்படும் சிஞ்செரோன் (zingerone), சோகவோல் (shogaols), மற்றும் சிஞ்செரோல் (gingerols) ஆகியன காரணமாகும். ஆய்வுகூட விலங்குகளில் சிஞ்செரோல் உணவுக்குழலியத் தொகுதியின் சுயாதீன அசைவைக் கூட்டுகிறது. மேலும் வலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாகவும் நுண்கிருமி கொல்லியாகவும் உள்ளதென்பதை ஆய்வுகூட விலங்குகளில் உறுதி செய்துள்ளனர். (1)
அமெரிக்க புற்றுநோய் மையத்தின் கூற்றின் படி இஞ்சி ஒரு புற்றுநோய் தீர்க்கவல்ல மருந்தாக கருதப்படுகின்றது, புற்றுநோய்க் கலங்கள் பெருக விடாமல் தடுக்கும் இயல்பு உடையது என்றும் ஆனால் இதனை நிரூபிக்க தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. அண்மைய ஆய்வுகளில் விலங்குகளில் ஏற்பட்ட புற்றுநோயை மேலும் வளர விடாமல் தடுக்க வல்லது என்று அறிந்துள்ளனர். எனினும் இதற்குரிய காரணங்கள், ஆய்வு முடிவுகள் போன்றவற்றிற்கு இன்னமும் உரிய விளக்கங்கள் கிடைக்கவில்லை. எனவே மேலும் ஆய்வுகளும் படிப்புகளும் தொடர்கின்றன. மனிதரிலும் விலங்குகளைப் போன்று இஞ்சி புற்றுநோயைத் தடுக்குமா என்பது ஆய்வின் முடிவிலேயே தெரியவரலாம்.
தசையில் ஏற்படும் தசைப்பிடிப்பு வலிகளையும் இஞ்சி போக்க வல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (2)
சில மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில், பயணப்பிணியில் மற்றும் மசக்கையில் ஏற்படும் குமட்டலையும் அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படக்கூடிய குமட்டலையும் போக்க வல்லது என்று தெரியவந்துள்ளது. எனினும் இவை இன்னமும் முற்றுபெற்ற ஆய்வுகளல்ல. மேலும், கர்ப்பிணிப் பெண்கள் இஞ்சி உபயோகிப்பதில் முரண்பாடான தகவல்கள் உள்ளன. இஞ்சி மரபணு விகாரத்தைத் தோற்றுவிக்கும் என்று சில ஆய்வுகளும் சில அப்படியல்ல என்றும் தெரிவிக்கின்றன. எனவே இன்னமும் இஞ்சி பற்றிய சரியான ஆய்வுகள் இல்லை.
சிஞ்செரோல் (gingerols) ஒரு அழற்சி நீக்கியாக செயற்படுகின்றது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூட்டு வதம், மொழி வாதம் போன்றவற்றால் ஏற்படும் வலி தொடர்ச்சியாக இஞ்சியை பயன்படுத்தி வந்தால் தீரும் என்று அறியப்படுகின்றது.எனினும் மேலே கூறியது போன்று, இவற்றை உறுதிப்படுத்த இன்னும் நிறைய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
ஆய்வுகூடத்தில் நடாத்தப்பட்ட சோதனையில் சூலகப் புற்றுநோய்க் கலங்களை இஞ்சி அழித்துள்ளது. (3)