பரட்டின் உணவுக்குழாய் (Barrett’s esophagus) என்பது உணவுக் குழாயை ஆக்கியுள்ள மேலணி இழையங்கள் இயல்புக்கு மீறிய உருமாற்றம் அடைதல் ஆகும், இவ்வுருமாற்றம் உணவுக்குழாயின் கீழ்ப்பகுதியில், அதாவது இரைப்பையை அண்மித்த உணவுக்குழாய்ப் பகுதியில் நிகழ்கின்றது. நோயை அறுதியிட வெற்றுக்கண்களால் அவதானிக்கக்கூடிய பெருமாற்றமும் நுண்நோக்கியால் அவதானிக்கக்கூடிய நுண்ணிய இழைய மாற்றங்களும் தேவையானவை.இயல்பான நிலையில் உணவுக்குழாயை செதின்மேலணிக் கலங்கள் உருவாக்குகின்றன, இவை பரட்டின் உணவுக்குழாயில் கம்பமேலணிக் கலங்களாக உருமாற்றம் பெறுகின்றன. நாட்பட்ட பரட்டின் உணவுக்குழாயால் புற்றுநோய் ஏற்படக்கூடிய கெடுதியான விளைவு ஏற்படலாம்.
இந்நோய்க்கான முக்கிய காரணியாக பின்னோட்ட உணவுக்குழாய் அழற்சி விளங்குகின்றது.[1] நெஞ்செரிவுக்கு (இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ) மருத்துவ சிகிச்சை பெறமுற்படுவோரில் 5–15% நோயாளிகள் பரட்டின் உணவுக்குழாய் உடையோராக உள்ளனர், எனினும் பெரும்பாலானோர்க்கு நோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை. பரட்டின் உணவுக்குழாய் ஒரு புற்றுநோய்க்கு முன்னிலை நோயாகும். இந்நோயை அறுதியிட உணவுக்குழாய்-இரைப்பை-முன்சிறுகுடல் அகநோக்கி மூலம் உணவுக்குழாய் அவதானிக்கப்படுகின்றது. இதன்போது நுணித்தாய்வுக்காக மேலணி இழையங்கள் எடுக்கப்படுகின்றன. நுண்ணோக்கி ஆய்வின் மூலம் இழைய உருமாற்றம் உறுதி செய்யப்படுகின்றது.[2][3]
இந்த நிலையை 1950இல் நோர்மன் பரட் (1903–1979) என்பவர் விவரித்தார்.[4]