புளோரின் (F) எனும் தனிமத்தின் அயன் வடிவமே புளோரைடு (F-) ஆகும், இது இயற்கையில் பல்வேறுபட்ட மூலங்களில் கிடைக்கின்றது. ஆப்பிள், தேநீர், கனிப்பொருள் நீர் (mineral water), கல்லீரல், மீன், முட்டை, கடல் உணவுகள் போன்றவற்றில் இயற்கையாகவே கிடைக்கின்றது. புளோரின் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து அல்ல, எனினும் இது பற்சொத்தையைக் கட்டுப்படுத்துவது மற்றுமன்றி, கல்சியம், உயிர்ச்சத்து ‘டி’யுடன் சேர்ந்து என்புக்கோறை நோய் (osteoporosis) வராமல் தடுக்கவும் உதவுகின்றது.
பல் மருத்துவர்களால் பற்களைச் சுத்தம் செய்த பிற்பாடு பயன்படுத்தப்படுகின்றது. இதய நோய்கள் மற்றும் உறுப்புகளில் கல்சியம் படிதல், தசை எலும்பு நோய்கள் முதலியவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. குடிக்கும் நீரில் இது சோடியம் புளோரைடு (NaF) வடிவில் சேர்க்கப்படுகின்றது, எனினும் ஒரு குறிப்பிட்ட அளவிலேயே புளோரின் உடலுக்குத் தேவை, அளவுக்கு மிஞ்சினால் புளோரின் நச்சுமையாகும்.குறைபாடு: உணவில் அல்லது நீரில் புளோரைடு அல்லது புளோரின் அளவு குறைவதால் ஏற்படுவதாகும். இக் குறைபாட்டால் பற்சொத்தையும் (பற்சூத்தை) என்புக்கோறை நோயும் உருவாகக்கூடிய தீவிளைவு உண்டு. நீர் < 1 ppm அளவில் புளோரினைக் கொண்டிருப்பது நன்மை தரும் விளைவைத் தரும்.பற்சொத்தையைக் கட்டுப்படுத்த புளோரைடு அடங்கிய பற்பசைகள் பரந்தளவில் உள்ளன.
நச்சுமை: மிகையான புளோரின் அளவு பற்களிலும், என்புகளிலும் புளோரைடு பதிவுகளை ஏற்படுத்தக்கூடியது. நீரில் > 10 ppm அளவில் இருத்தல் இத்தகைய விளைவுகளை உண்டாக்கும். சிறார்களில் பாற்பல் விழுந்து நிலையான பல் வளரும் சந்தர்ப்பத்தில் மிகையான புளோரின் அளவு பற்களைச் சேதப்படுத்தும். ஒரு கிலோகிராம் எடைக்கு 3-5 மில்லி கிராம் (3–5 mg/kg) புளோரைடு எடுப்பது நச்சுமை அறிகுறிகளை வெளிப்படுத்தும். மிகவும் தீயவிளைவைத் தரும் அளவுகள் வயது வந்தோரில் 32–64 mg/kg , சிறார்களில் 16 mg/kg ஆகும்.
இதன் ஆரம்ப அறிகுறிகளாக வெண்கட்டி நிறத்திலான ஒழுங்கற்ற பொட்டுக்கள் பல் மிளிரியின் மேற்பரப்பில் பரவியிருக்கும். பின்னர் இவை மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தை அடையும், இது ஒருவகை பலவண்ணத் தோற்றத்தைக் கொடுக்கும். கடுமையான நச்சுமை மிளிரியைச் சேதப்படுத்தும்; சிறு குழிகளை உண்டாக்கும். எலும்பு தடித்தல் (osteosclerosis), முள்ளெலும்பு வெளிவளர்ச்சி (exostoses of the spine ), கப்பைக்கால் போன்றவை மிகக்கூடியளவில் புளோரைடு எடுப்பதால் வயது வந்தோரில் ஏற்படும்.
மேலும் அறிகுறிகள்: வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, மிகையாக எச்சில் சுரத்தல், சீதமென்சவ்வுப் பாதிப்பு, குமட்டல், வாந்தி, தலைவலி, தசை இளைப்பு, நடுக்கம். இதய நிறுத்தம், அதிர்ச்சி, இதயத்துடிப்புச் சீரின்மை போன்ற காரணங்களால் மிகையான அளவால் உண்டாகும் இறப்பு ஏற்படுகின்றது.
புளோரைடு எடுக்கும் அளவைக் குறைப்பது சிகிச்சையில் அடங்கும். மிகையான புளோரைடு அடங்கியுள்ள நீரை அருந்துதல் கூடாது, சிறார்கள் புளோரைடு அடங்கிய பற்பசையை விழுங்குதல் கூடாது. பற்களில் ஏற்படும் புளோரைடு மிகைப்புக்கு பல் மருத்துவரை அணுகல் தேவையானது.
மேற்கோள்கள்
- http://www.merckmanuals.com/professional/nutritional_disorders/mineral_deficiency_and_toxicity/fluorine.html; Fluorine; revision August 2008 by Larry E. Johnson, MD, PhD
- http://en.wikipedia.org/wiki/Fluoride_poisoning