அன்னாசி (Pineapple: Ananas comosus அல்லது Ananas sativus) பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. ஒருவித்திலைப் பூத்தாவரங்கள் வகையுள் அடங்கும் புரோமிலியேசியே (Bromeliaceae) குடும்பத்தைச் சார்ந்த தாவரம் அன்னாசி ஆகும். உடன் பழமாக அல்லது தகரத்தில் அடைத்து அல்லது சாறாக உண்ணப்படுகிறது. அன்னாசியில் வெல்லமும் மலிக் மற்றும் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் உயிர்ச்சத்து ‘பி’ (வைட்டமின் B) வகைகளான ‘பி1′,’பி2′,’பி6’ (B1, B2, B6) ஆகியனவற்றையும் உயிர்ச்சத்து ‘சி’யையும் மிகுந்தளவில் கொண்டுள்ளது. இதில் காணப்படும் புரோமேலயின் எனும் நொதியம் புரதத்தை சமிபாடு அடையச்செய்யும்,எனவே மிக்க புரதச்சத்து உள்ள உணவு (இறைச்சி போன்றன) உண்பவர்கள் சாப்பாட்டின் இறுதியில் இதனை உண்டால் நன்கு சமிபாடு அடையச்செய்யும்.
மருத்துவ ஆற்றல்கள்
- உடலில் குருதி (இரத்தம்) இழக்கப்பட்டோ அல்லது குறைவடைந்தோ காணப்படும் நிலையில் அன்னாசிப்பழம் ஒரு சிறந்த ஊட்டச்சத்தாக உதவிபுரிகிறது. அனிமியா எனப்படும் இரத்தசோகை, பெண்களில் மாதவிலக்கால் ஏற்படும் அதிக குருதிப்போக்கு போன்றன குருதிப் பற்றாக்குறைக்கான காரணிகள் ஆகும்.
- இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரண உறுப்புக்களை வலுப்படுத்துவதில் அன்னாசி உதவுகின்றது. ஏற்கனவே கூறியதுபோல புரதத்தின் சமிபாட்டை இலகுவாக்குவதன்மூலம் சீரண உறுப்புக்களுக்கு அதிக வேலையைக் கொடுப்பதில்லை.
- பித்தசம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசிமந்தம் போன்றவற்றை நீக்கப் பயன்படும்.
- அன்னாசிச்சாறு மஞ்சள்காமாலை நோய் குணப்படுவதை துரிதப்படுத்தும்.
- பொதுவாகப் பெண்களில் ஏற்படும் வெள்ளை நோயைப் (வெட்டை நோய் ) போக்க அன்னாசியின் நீண்டகாலப் பயன்பாடு உதவி புரிகின்றது.
- இவற்றை விட தலைவலி, கண்நோய்கள், காதுநோய்கள், பல்நோய்கள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், ஞாபகசக்தி குறைவு போன்றவற்றின் தீர்வுக்கும் அன்னாசி மிக்க உதவி புரிகின்றது.
- அன்னாசியின் வேர்களை அல்லது பழத்தை அரைத்து தோலில் பூசுவதன் மூலம் காயங்களால் ஏற்பட்ட வீக்கம் குணமடையும்.
- அன்னாசி வயிற்றில் உள்ள புழுக்களைக் கொல்லும் சக்தி உடையது என பிலிப்பின்ஸ் நாட்டு மக்களால் நம்பப்படுகின்றது.
- தொந்தி அல்லது தொப்பை குறைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.
- அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து பழச்சாறாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெறும்.
உபயோகிக்கும் முறை
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகள் செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். அல்லது தேனும் அன்னாசிப்பழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் நோய்கள் குணமாகும்.
தொப்பை குறைய: (இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு என்பன தேவை) அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி, பின்னர் நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டுச் சாறை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும்.
100 கிராம் அன்னாசியில் உள்ள போசாக்குப் பொருட்கள் (3.5 அவுன்ஸ்) | |
---|---|
சக்தி | 202 kJ (48 kcal) |
மாப்பொருள் | 12.63 g |
வெல்லம் | 9.26 g |
நார்ப்பொருள் | 1.4 g |
கொழுப்பு | 0.12 g |
புரதம் | 0.54 g |
தயமின் (உயிர்ச்சத்து. B1) | 0.079 mg (6%) |
இரைபோபிளேவின் (உயிர்ச்சத்து. B2) | 0.031 mg (2%) |
நியாசின் (உயிர்ச்சத்து. B3) | 0.489 mg (3%) |
பண்டோதீனிக் அமிலம் (உயிர்ச்சத்து B5) | 0.205 mg (4%) |
உயிர்ச்சத்து (உயிர்ச்சத்து B6) | 0.110 mg (8%) |
போலிக் அமிலம் (உயிர்ச்சத்து. B9) | 15 μg (4%) |
உயிர்ச்சத்து C | 36.2 mg (60%) |
கல்சியம் | 13 mg (1%) |
இரும்பு | 0.28 mg (2%) |
மகனீசியம் | 12 mg (3%) |
மங்கனீசு | 0.9 mg (45%) |
பொசுபரசு | 8 mg (1%) |
பொட்டாசியம் | 115 mg (2%) |
நாகம் | 0.10 mg (1%) |
அன்னாசிப்பழம் ஒரு கூட்டுக்கனி
(இப்பகுதியை எழுதியவர் – பாபு )
அன்னாசிப்பழம் ஒரு கூட்டுக்கனி (தொகுப்புக்கனி / கொத்துக்கனி) என்பது உங்களுக்குத் தெரியுமா?செந்தாழை எனப்படும் அன்னாசி பிரேசிலைத் (Mesoamerica பகுதிகள்) தாயகமாகக் கொண்டது. அதற்கும் முன்னரே தென்னமெரிக்க டுபியன் (Tupian) மொழிகளில் nanas (அருமையான பழம்) என்று சொல்லப்படுவதில் இருந்த Ananas comosus என்ற நுட்பப் பெயர் பெறப்பட்டு பின்னர், Ananas வகைகளை Pine என்று அழைப்பதால் இதற்கும் Pine என்ற பெயர் சேர்ந்துகொண்டது. தமிழிலும் அன்னாசி என்றே அழைக்கின்றோம்.அன்னாசியின் மலர்கள் கொத்து மலர்களாகும் (Inflorescence). அதன் ஒவ்வொரு மலரும் சூல்பிடித்துக் கனியாகும்பொழுது ஒரே கனியாக அடுக்கடுக்காக அமைந்து விடுகின்றது. ஆக, அது ஒரே ஒரு கனியல்ல, பல கனிகளின் தொகுப்பு. இது போன்று சீத்தாப்பழம் (Annona squamosa), மல்பெர்ரி (Morus) போன்றவையும் கொத்துக்கனிகளாகும்.ஒரு கணிதத்தொடரின் (Fibonacci Series) அமைப்பில் இக்கனிகள் அமைந்திருப்பது நம்மை இயற்கையின் சிறப்பாக அதனை வியக்க வைக்கின்றது.